Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; மும்பையில் முகாமிட்ட தனிப்படை போலீசார்!

Published on 08/08/2024 | Edited on 08/08/2024
Armstrong case special police team stationed in Mumbai

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் உட்பட சுமார் 200 பேரிடம் போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ரவுடி சம்பவம் செந்திலை தேடி மும்பையில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் சம்பவம் செந்திலை தேடி வந்த தனிப்படை போலீசார் தற்போது மும்பையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மத்திய சிறையில் இருந்த சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் போலீசார் 3 நாட்கள் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது சம்பவம் செந்திலின் தூத்துக்குடி மற்றும் சென்னை குழுவின் பின்னணி குறித்தும் விசாரணையில் போலீசார் கேட்டறிந்துள்ளனர். அதே சமயம் சம்பவம் செந்திலின் மற்றொரு கூட்டாளியான எலி யுவராஜை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படும் சீசிங் ராஜா என்ற ரவுடியையும் 10 தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்