ஊரடங்கில் மக்கள் வெளி நடமாட்டங்களை குறைத்துக் கொள்வதற்காக பல்வேறு அறிவிப்புகளை செய்து வருகிறது அரசு. இதன் எதிரொலியாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வாழும் மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி பெற பாஸ் அறிமுகம் செய்துள்ளார். இதன்படி திங்கள்கிழமை, வியாழக்கிழமை பச்சை நீலக்கலரில் பாஸ், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஊதா நிற கலரிலும், புதன் கிழமை, சனிக்கிழமை ரோஸ் நிறத்திலும் அனுமதி பாஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/Au4W3iGCEvsgCs94ungfRmaFKGnRZ6f9x5E4w1epPoQ/1586185149/sites/default/files/inline-images/ra_6.jpg)
இந்த பாஸ்களை ஒவ்வொரு கிராம ஊராட்சி செயலாளர்களும் வைத்திருப்பார்கள். அவர்கள் அந்தந்த ஊரிலுள்ள குடும்பத்தினர் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்குமுன் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு இந்த பாஸ் வழங்க வேண்டும். அப்படி வெளியே செல்பவர்கள் 15 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும், அதற்கு மேற்பட்டவர்கள் வெளியே வரக்கூடாது. கடைகள் திறந்திருக்கும் நேரமான காலை 6 மணி முதல் பகல் ஒரு மணி வரை இந்த அனுமதி பாஸ் உடன் வெளியே சென்று வர அனுமதி உண்டு.
![nakkheeran app](http://image.nakkheeran.in/cdn/farfuture/OjF7oSZ0PAmVBAzeibpHYJ_DNkNSD6nBArIK_eYJv48/1586187330/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_15.gif)
இதைதவிர்த்து தனிப்பட்ட முறையில் யார் வெளியே புறப்பட்டுச் சென்றாலும், அவர்களை கைது செய்ய, அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மக்கள் அதிக அளவில் வெளிநடமாட்டத்தை குறைப்பதற்கும், அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்புடன் இருப்பதற்கும் இந்த பாஸ் உதவிகரமாக இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்களின் இந்த புது முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. பல அரசியல் கட்சியினரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். ஊரடங்கு, மக்கள் தனிமைப்படுத்துதல், நோய் வராமல் தடுப்பது போன்றவற்றிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்கிறார்கள் அரியலூர் மாவட்ட ஆட்சித் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்.