Skip to main content

"சீக்கிரம் வாங்க அதிகாரிகளே!" - வெள்ளத்தில் சிக்கிய மக்கள் 'வெற்றிலை பாக்கு' வைத்து அழைப்பு!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

ariyalur

 

திருமானூர் அருகே முடிகொண்டான் கிராமத்தில், வெள்ளநீர் நெல்வயல்களில் சூழ்ந்ததால், விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வராததால் வெற்றிலைப் பாக்கு வைத்து, மாவட்ட ஆட்சியரை அழைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மஞ்சமேடு ஊராட்சிமன்றத்தில் உள்ள, முடிகொண்டான் கிராமத்தில் வெள்ளநீர் புகுந்து, விளைநிலங்களில் சேதம் ஏற்பட்டது. இதனால், முடிகொண்டான் விவசாயிகள் சங்கத் தலைவர் தங்கராசு தலைமையில், சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

 

இதில், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம், கிராம விவசாயச் சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், தென்னரசு, விநாயகம், இளவரசன், கிராம விவசாயச் சங்க பெண் நிர்வாகிகள் முத்துலெட்சுமி, கண்ணகி, பானு, கலைச்செல்வி, ராசாத்தி, இலக்கியா, ராசமணி, சுலோச்சனா, சின்னம்மாள், மகாலெட்சுமி மற்றும் தமிழ்நாடு விவசாயச் சங்க நிர்வாகி கணேசன் உள்ளிட்ட திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் வராததால், மாவட்ட ஆட்சியர் உடனடியாக, வெள்ளம் பாதித்த நெல் வயல்களைப் பார்வையிட வேண்டும் என, 'வெற்றிலைப்பாக்கு வைத்து சீக்கிரம் வாங்க அதிகாரிகளே!' எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ariyalur

 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது, 300 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மூழ்கிவிட்டது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு இதேபோல வெள்ளநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கியது. மீண்டும் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டது. தொடர் கனமழையால் மீண்டும் பயிர்கள் மூழ்கி விட்டது. இனி நடவுக்குப் பயிர்கள் கிடைக்காது. இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க, அதிகாரிகள் முறையாக, வெள்ளநீர் வடியும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். மேலும் முடிகொண்டான் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் உள்ள பாலத்தை உயர்மட்டப் பாலமாகக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

cnc


வெற்றிலைப்பாக்கு வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அரியலூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அரியலூர் டி.எஸ்.பி மதன் தலைமையிலான போலீசார் மற்றும் திருமானூர் பொறுப்புக் காவல் ஆய்வாளர் வெங்கடேசுவரன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், போராட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுப் பணித்துறையினர், வடிகால்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்