கரோனா வைரஸை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைச் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவர் கே.எம்.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களில், கரோனாவுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்காத நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் இந்நோயைப் பரிபூரணமாகக் குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட தயாராக இருப்பதாகவும், சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாகக் கலந்து மருந்தாக உட்கொண்டாலே, கரோனா உள்ளிட்ட எல்லா வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது..
இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த போது, கரோனாவைச் சித்த மருத்துவம் உள்ளி்ட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய, மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையி்ல் நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வசந்தகுமார், சித்த மருத்துவத்தில் கரோனாவைக் குணப்படுத்த கண்டறிந்துள்ள மருந்து குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர், வழக்கு விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி கரோனாவைக் குணப்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.