Skip to main content

சென்னை பட்டியலிலேயே சேருங்கள்... அரியலூர் பொதுமக்கள் கோரிக்கை

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

ariyalur district




அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கரோனா நோயாளிகள் மட்டுமே திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் இன்னும் சில நாட்களில் குணமாகி அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து, பச்சை மண்டலத்திற்கு வர இருந்தது. இதனால் வரும் மே 4ம் தேதி முதல் அரியலூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு வரும் என்று பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பணியாற்றிய தொழிலாளர்கள் அங்கு கரோனா தொற்று பரவுவதால் அங்கு இருந்து சொந்த மாவட்டத்திற்கு வந்தனர். அப்போது உடனே கடந்த 30ம் தேதி 20 நபர்களை பரிசோதித்தபோது, அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சென்னையிலேயே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு வந்தபோது ஆய்வு செய்ததால் 20 நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர். 
 

மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றிய அரியலூர் மாவட்ட சேர்ந்தவர்கள் வரும்போது ஆய்வு செய்யப்பட உள்ளனர். கண்டுபிடிக்கப்படும் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தப்பட உள்ளனர். 
 

சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழ்ந்துகொண்டு பணி செய்து, கரோனா பாதித்து சொந்த ஊர் வந்தவர்களை அரியலூர் மாவட்டத்தில் கரோனா ஆய்வு செய்ததால் அரியலூர் மாவட்ட கரோனா நோயாளிகள் கணக்கில் தமிழக அரசு சேர்க்கக்கூடாது. 
 

சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசித்துக் கொண்டு அங்கு வேலை பார்த்த காரணத்தால், அவர்களை சென்னை மாவட்ட கரோனா பாதித்தோர் பட்டியலில் சேர்த்து, செய்ய வேண்டிய சிகிச்சைகளை, உதவிகளை உடனே செய்ய வேண்டும். அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை என்றால் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் சிகப்பு மண்டலமாக மாறி அரியலூர் மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இதனால் அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தவிக்கின்றனர். அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். ஆரஞ்சு மண்டலமாக இருந்தால் ஏதாவது கூலி வேலைக்கு சென்று பிழைத்துக்கொள்வார்கள் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்