அரியலூர் அருகில் ஏற்கனவே அரசு சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 809 கோடி செலவில் அதே பகுதியில் அரசு விரிவாக்கம் செய்து சிமிண்ட் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. ஆனந்தவாடி என்ற ஊரில் 300 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. இதில் இருந்து சுண்ணாம்பு கல் தோண்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
ஆனால் ஆனந்தவாடி கிராம மக்கள், எங்கள் ஊரில் நிலம் கையகப்படுத்தி உள்ளதால் எங்கள் ஊர் மக்களுக்கு சுரங்க பணியில் வேலை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து ஆனந்தவாடி கிராம மக்கள் எங்களுக்கு வேலை தரவில்லை என்றால் தீக்குளிப்போம் என்று அறிவித்தனர்.
விஷயம் சீரியஸாக சென்றதால், ஒன்றாம் தேதி இரவு தொழில்துறை அமைச்சர் சம்பத், அரசு கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா, அரசு சிமெண்ட் ஆலை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆனந்தவாடி மக்களை அழைத்து வந்து அமைச்சர் முன்னிலையில் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதனடிப்படையில் அரசுத் தரப்பில் ஆனந்தவாடி கிராம மக்களுக்கு முதற்கட்டமாக 30 பேருக்கும் அடுத்தகட்டமாக 27 பேருக்கும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வேலை தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வரும் 5-ஆம் தேதி முதல் ஆனந்தவாடி பகுதியில் சுரங்கம் தோண்ட கிராமமக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக அரியலூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகள் செயல்படுகின்றன. இவைகளில் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டுவந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர். மண்ணின் மைந்தர்களான அரியலூர் மாவட்டத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு இங்கு வேலை வழங்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட நிலையை தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
முறைகேடாக சுரங்கம் தோண்டுவது தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பல ஆண்டுகளாக போராட்டம், ஆர்ப்பாட்டம் என அவ்வப்போது நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அரியலூர் மாவட்ட மக்கள். இதற்கு தீர்வு தான் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.