கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் தமிழகம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகத் திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை (03/05/2020) முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பில் மருத்துவமனை, மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிவிட்டுச் சொந்த ஊரான அரியலூர் மற்றும் பெரம்பலூருக்குத் திரும்பிய 20 தொழிலார்களைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது உறுதியானது. இதில் அரியலூரைச் சேர்ந்த 19 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.