
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அரிசி கொம்பன் வனத்துறையினருக்குப் போக்கு காட்டி வந்தது. இதையடுத்து மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணைப் பகுதியில் புகுந்து முகாமிட்டு வந்தது.
இதையடுத்து அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதால் கடந்த 28 ஆம் தேதி முதல் தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையின் தொடர் முயற்சியின் பலனாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு அரசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குப் பின்னர் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி கம்பம் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.