அரிக்கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த முயற்சியானது தோல்வியில் முடிந்தது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சின்னகானல் பகுதியில் 10 பேருக்கும் மேற்பட்டோரை தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் எனும் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. நாட்டுக்கல் தெரு, அதையடுத்துள்ள மின்வாரிய குடியிருப்பு, மின்வாரிய அலுவலகம் இருக்கும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருந்தது. பின்னர் அங்கிருந்த புளியந்தோப்பு ஒன்றுக்குள் புகுந்த யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர்.
முதற்கட்டமாக மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஏற்கனவே இந்த அரிக்கொம்பன் யானை கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஆறு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தேக்கடி புலிகள் காப்பகத்தில் விடப்பட்டிருந்தது. அங்கிருந்து மேகமலை சென்ற யானை மீண்டும் குமுளியில் இறங்கி தற்போது கம்பம் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளது.
சாலையில் அச்சுறுத்தும் விதமாக நடந்து வந்த யானை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை துரத்தும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்காக பொள்ளாச்சியிலிருந்து இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. அதேநேரம் ட்ரோன் மூலம் கண்காணிக்க முற்பட்டபோது யானை தேனி - குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை அருகே உள்ள வாழை தோப்பிற்குள் புகுந்தது. அந்த வாழை தோப்பை சுற்றி போலீசார் மற்றும் வனத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அரிக்கொம்பன் யானை வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.