கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தமிழக எல்லையான குமுளி வழியாக கம்பத்திற்குள் நுழைந்த அரிக்கொம்பன் என்ற அரிசி கொம்பன் யானை, நகரில் பல பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை விரட்டியதில் மக்கள் பதறியடித்துக் கொண்டு வீடுகளுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர்.
இந்த விஷயம் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தெரியவே அரிக்கொம்பனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். ஆனால் அரிக்கொம்பன் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி வழியாக சென்று சுருளி மலைப்பகுதிக்குள் தஞ்சமடைந்தது. அதைத் தொடர்ந்து அரிக்கொம்பனை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்படியிருந்தும் அரிக்கொம்பனை பிடிக்க முடியவில்லை. ஆனால் சுருளிமலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் அப்பகுதியில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கதமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் நுழைந்து அங்கிருந்த 300 தென்னை மரங்களை வேரோடு சாய்த்து அழித்திருக்கிறது.
அதை கேள்விப்பட்ட தங்கதமிழ்செல்வன் மனம் நொந்துபோய்விட்டார். இரண்டு வருடங்களாக தென்னங்கன்றுகளை காட்டுப்பன்றியிடம் இருந்து காப்பாற்றி அதை வளர்த்து மரமாக்கி இன்னும் சில மாதங்களில் காய் கோர்க்கும் நேரத்தில் இப்படி தென்னை மரங்களை அக்கொம்பன் சேதப்படுத்திவிட்டது. ஒரு சில தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் சேதப்படுத்திக் கொண்டு மலைப்பகுதிக்குள் அரிக்கொம்பன் தஞ்சமடைந்து வருகிறதே தவிர இன்னும் வனத்துறையினர் பிடிக்க முடியவில்லை.