Skip to main content

“மணல் உன் அப்பன் வீட்டு சொத்தா? முடிஞ்சத பார்த்துக்கோ” - முன்னாள் அதிமுக அமைச்சரிடம் வாக்குவாதம்!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Argument with former AIADMK minister, stealing sand gang

 

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மணல் திருட்டு நடப்பதும், அதை  வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பந்தப்பாறை பகுதியில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வாகனங்களில் மணல் கடத்துவது தொடர்ந்து நடக்கிறது. அதனால் 24 மணி நேரமும் நடக்கின்ற மணல் கொள்ளையை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.  

 

வழக்கம்போல ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளி டிராக்டர்களில் கடத்துவது நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று அங்கு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன், அதிமுக மாணவரணி செயலாளர் பெருமாள் பிச்சை உள்ளிட்டோர் விதிமீறலான மணல் கடத்தலைத் தடுக்க முயன்றனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. டிராக்டரை மறித்த இன்பத்தமிழன் “இதை வீடியோ எடுப்பா..” என்று கூற, மணல் கடத்தியவர்களோ, “இது உன் அப்பன் வீட்டு சொத்தா?” என்று எகிற, அந்த இடம் ரசாபாசமானது. “அப்படித்தான் மணல் அள்ளுவோம். உன்னால  முடிஞ்சத பார்த்துக்கோ..” என்று சத்தம் போட்ட மணல் கடத்தல் ஆசாமி ஒருவர், பெருமாள் பிச்சையை முதுகில் அடித்து அங்கிருந்து நெட்டித்தள்ள, “என் கூட வந்த ஆள் மேல கை வைக்காத..” என்று இன்பத்தமிழன் எச்சரிக்க, தொடர்ந்து அமளிதுமளியானது. 

 

Argument with former AIADMK minister, stealing sand gang

 

ஒருகட்டத்தில் வழியில் சேர் போட்டு அமர்ந்து டிராக்டரை மறித்த இன்பத்தமிழன் மீது டிராக்டரை ஏற்றி விடுவார்களோ என்ற பரபரப்பு நிலவியது. அதனால், “சரி.. சரி.. கோர்ட்ல பார்த்துக்குவோம்..” என்று சவால் விட்டு அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை அதிமுகவினருக்கு ஏற்பட்டது. லோக்கல் ஆளும் கட்சியினரோ, “தடுக்கப் போன அதிமுகவினர் கனிமவளச் சுரண்டலுக்கு எதிரானவர்களா? நாட்டு நலனில் அக்கறை கொண்ட  நல்லவர்களா? எதிர்ப்பு என்ற பெயரில் ஸ்டண்ட் அடித்து ஏதாவது தேறாதா? மாமூல் கிடைக்காதா? என்ற சுயநலத்தோடு போனார்கள். அதனால்தான் அதிமுகவினரின் உள்நோக்கத்தை அறிந்த மணல் கடத்தல் ஆசாமிகள், அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.” என்று விமர்சனம் செய்கிறார்கள்.

 

உயர்நீதிமன்றம் பல தடவை எச்சரித்து உத்தரவிட்டும் தமிழகத்தில் விதிமீறலாக மணல் கடத்துவது பல மாவட்டங்களிலும் தொடர்ந்து  நடக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்