திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனியில் கடந்த 2017ஆம் ஆண்டு அங்கிருந்த 237 குடிசை வீடுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது. அங்கிருந்த குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கிக் கொடுப்பதாக குடிசை மாற்று வாரியம் கூறியிருந்தது. ஆனால் அந்த இடத்தில் 192 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
அதில், 64 குடும்பத்தினரிடம் ஒரு வீட்டிற்கு 63 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றுக்கொண்டு, அவர்கள் மட்டும் குடியேறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், அங்கு கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் தரமற்றிருப்பதாகவும் கையில் சுரண்டினாலே அதன் சுவர்கள் பெயர்ந்து வருவதாகவும், இதனால் அந்த கட்டடங்கள் இடிந்து விழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அங்கு உடனடியாக மராமத்து பணிகள் செய்து வீடுகளை உரியவர்களுக்கு விரைவாக ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி என்.ஐ.டி வல்லுநர் குழுவைக் கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அந்த குடியிருப்பு கட்டப்பட்ட நிலையில், அதைக் கட்டிய ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு குடியேற காத்திருக்கும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.