தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, மூட்டைக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை முறைகேடாகப் பணம் பெறப்படுவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன.
கடலூர் மாவட்டத்திலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு முழுமையான தொகை வழங்காமலும், கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் பெறப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள கோதண்டராமபுரத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார், துணைக் காவல் கண்காணிப்பாளர் மெல்வின் ராஜாசிங் தலைமையில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத, ரூபாய் 84,631 பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த தொகை கொள்முதல் நிலையத்திற்கு எப்படி வந்தது? எனவும், சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகள், இடைத்தரகர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.