சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெருமாள் கோயில் காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜா (41). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா (35). எடப்பாடியில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் உதவி ஹெச்.எம். ஆக பணியாற்றி வருகிறார்.
தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும்கூட செல்போனில் சந்தியா பலரிடம் பேசிக்கொண்டே இருப்பாராம். இதனால் முத்துராஜாவுக்கு, மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சமையல் செய்யும்போதுகூட செல்போனை காதோரம் வைத்துக்கொண்டு தலையை சாய்த்தபடியே பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை பலமுறை கணவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் சந்தியா யாருடனோ செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த முத்துராஜா, செல்போனை பிடுங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதால் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டு முன்பு கூடிவிட்டனர். அப்போது திடீரென்று சந்தியா கணவரை அறைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராஜா, வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து சந்தியாவின் காதை வெட்டினார். இதில் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி தனித்தனியாக அழைத்துச் சென்றனர். காயம் அடைந்த சந்தியா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எடப்பாடி போலீஸ் எஸ்ஐ ராமச்சந்திரன், முத்துராஜாவை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.