சேலம் அருகே, அனுமதியின்றி வெடி பொருள்கள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க கல் குவாரி உரிமையாளரை மிரட்டி வசூல் வேட்டை நடத்திய, காவல்துறை ஏ.டி.எஸ்.பி. சூரியமூர்த்தி, டி.எஸ்.பி. லட்சுமணதாஸ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல்துறை உள்கோட்டத்தில் கடந்த 2017 முதல் 2020ம் ஆண்டு வரை டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்தவர் சூரியமூர்த்தி. தற்போது அவர், விருதுநகர் மாவட்ட காவல்துறையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வருகிறார்.
சேலம் மாவட்டம், காரிப்பட்டி காவல்நிலையத்தில் கடந்த 2020 முதல் 2021ம் ஆண்டு வரை லட்சுமணதாஸ் என்பவர் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது இவர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆக பணியாற்றுகிறார்.
இவர்கள் இருவரும் சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில், பெரியகவுண்டாபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் நடத்தி வரும் கல்குவாரியில் அனுமதியின்றி 121 ஜெலட்டின், 139 டெட்டனேட்டர்களை வைத்து இருந்ததாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போதைய டி.எஸ்.பி.யாக இருந்த சூரியமூர்த்தி உத்தரவின் பேரில், அப்போதைய காரிப்பட்டி ஆய்வாளர் லட்சுமணதாஸ் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமையாளர் உள்ளிட்ட சிலரை கைது செய்யாமல் இருக்க, டி.எஸ்.பி. 50 ஆயிரம் ரூபாயும், காவல் ஆய்வாளர் 30 ஆயிரம் ரூபாயும் மிரட்டி லஞ்சம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து குவாரி உரிமையாளர் விஜயகுமாரின் சகோதரர் ராஜ்குமார் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை, தமிழக டி.ஜி.பி., முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் மனுக்களை அனுப்பினார். இந்த புகார் குறித்து விசாரிக்க சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை லஞ்ச ஒழிப்புப்பிரிவு இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.
அறிக்கையை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகத்தின் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி. சூரியமூர்த்தி, டி.எஸ்.பி. லட்சுமணதாஸ் ஆகியோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.