கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது சென்னையில் அரசு சித்த மருத்துவர் வீரபாகு தலைமையில் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு துவக்கப்பட்டது. அதன் மூலம் நோய் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் அங்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். அப்படி அங்கே சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, மாவட்ட தலைநகரங்களில் சித்த மருத்துவ பிரிவு துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அதற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
தற்போது கரோனா இரண்டாம் அலையில் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சித்தா முறையில் சிகிச்சை எடுக்க விரும்பும் நோயாளிகள் அங்கே சென்று தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். அந்தவகையில், இப்படி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு வசதியாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கூடு வெளி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் துவக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 100 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்த வைத்தார். மேலும் அவர், “தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் நோய் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் பாதிப்பு குறைந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்கச் செய்துள்ளோம். இதனால் எந்தவித தட்டுப்பாடும் இன்றி இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைக்கிறது. ஏற்கனவே, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது, இங்குள்ள கூடுவெளி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏழு வகையான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு காலை, மாலை இரண்டு வேளையும் கசாயம் மற்றும் மூலிகை தேநீர், மூலிகை கலந்த சிற்றுண்டி, மூலிகை சம்பந்தப்பட்ட மதிய உணவு மற்றும் சீரக கஞ்சி, சுக்கு காபி, சிறு தானிய வகைகள், சுண்டல் ஆகியவை வழங்கப்படுகின்றன. இங்கு சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. மனதளவில் ஆரோக்கியமாக தைரியமாக நோயை எதிர்க்க சித்த மருத்துவரின் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சித்த மருத்துவத்தால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. எனவே விருப்பம் உள்ளவர்கள் இங்கு வந்து தங்கி சிகிச்சை பெற்று நலமுடன் செல்லலாம்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன், எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், ஊரகத் திட்ட வளர்ச்சி இயக்குநர் மகேந்திரன், சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் ரமேஷ் பாபு, துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட வட்டாட்சியர் ராமதாஸ், அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா ஆகியோர் கலந்து கொண்டனர்.