சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டு வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. தற்பொழுது அப்பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது. மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்பில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கிறது.
சென்னையில் இருந்து தென் மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் ரயில் நிறுத்தம் இல்லாததால் சென்னை நகர்ப் பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி வருபவர்கள் பெரும்பாலும் சாலை வழியாகத்தான் பயணிக்க முடியும். இதனால் குறிப்பாகப் பண்டிகை காலங்களில் ஜிஎஸ்டி சாலையில் மேலும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான முழுச் செலவைத் தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு முதல் கட்டமாக 40 லட்சம் ரூபாயைத் தமிழக அரசு ரயில்வே நிர்வாகத்திடம் கொடுத்துள்ளது. கட்டுமான பணிகள் இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.