மத்திய அரசின் CAA, NRC சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் பேரணியில் TNTJ கொடிகளை விட தேசியக்கொடிகளே அதிகமாக நிறைந்திருந்தன.
காலை 11 மணிக்கு TNTJ தலைவர் சம்சுல்லுஹா தலைமையில் பேரணி தொடங்கியது,
இப்பேரணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆதரவு தெரிவித்தார். TNTJ தலைவர்களோடு அணி வகுத்தார். அவருடன் துணை பொதுச்செயலாளர் தைமிய்யா தலைமையிலான மஜக-வினரும் பங்கேற்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக பேருந்துகள், வேன்கள் என வாகனங்களில் வருகை தந்திருந்தனர்.
பேரணியில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் "நாட்டை பிளக்காதே, மக்களை பிரிக்காதே" என்றும் முழக்கங்கள் எழுப்பினர். ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடியை தூக்கிக்கொண்டு TNTJ-வினர் அணிவகுத்தனர். இது அனைவரையும் கவர்ந்தது.
தமிமுன் அன்சாரி MLA பத்திரிகையாளர்களை சந்தித்து பேரணியின் எழுச்சி குறித்து பேசினார். அப்போது TNTJ வலிமையான களப்பணியாளர்களை கொண்ட இயக்கம். அது இன்று லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி உள்ளது.
மத்திய அரசு கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு இதை அமுல்படுத்த கூடாது என்றும் மீறி அமுல்படுத்தினால் அதை எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம் என்றும் இது மற்றுமொரு சுதந்திர போராட்டம் என்றும் அறிவித்தார்.