மன்னார்குடி அருகே சிவன் கோயிலின் உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரம் கொள்ளை அடித்துள்ளனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்றதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் ஐம்பொன் சிலைகள் தப்பியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலில் இருந்த உண்டியலில் நேற்று இரவு மர்ம நபர்கள் தங்களின் கைவரிசையை காட்டி உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.30 ஆயிரத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
உண்டியலை உடைத்து அதிலிருந்ததை கைப்பற்றியதோடு விட்டுவிடாமல், கோயிலின் உள்ளே சென்று சுவாமி சிலைகளையும் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்டு அங்கு சென்றுள்ளனர். பொதுமக்கள் வருவதை தெரிந்துகொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றனர்.
‘யார் செய்த புண்ணியமோ பல கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் ஐம்பொன் சிலைகள் தப்பியது.’ என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
இது குறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை காவல்துறையினர், மற்றும் கைரேகை தடவியல் நிபுணர்கள் வந்து சோதனை மேற்கொண்டு தப்பியோடிய கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
‘திருட வந்தவர்கள் உண்டியலை குறிவைத்து வரவில்லை, அவர்களுடைய நோக்கம் ஐம்பொன் சிலைதான், அது முடியாத பட்சத்தில் போகிற போக்கில் உண்டியலை உடைத்து எடுத்து சென்றிருக்கின்றனர். உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டுதான் பொதுமக்கள் வந்திருக்கின்றனர்.’ என்கிறார்கள் காவல்துறையினர்.