அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், ஜாமீன் மனு விசாரணைக்காக செந்தில் பாலாஜி தரப்பு காத்திருக்கிறது. இந்நிலையில் துறையேதும் இல்லாமல் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்புகளில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது இன்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி துறையேதும் இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் 'குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க அரசியல் சட்டமும் சட்ட விதிகளும் தடை விதிக்கவில்லை' எனத் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் எதிர்த் தரப்பு மனுதாரர்கள், 'ஆளுநர் சட்ட விதிகளின்படியே செயல்பட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜியால் அரசுப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்' என வாதங்களை வைத்தனர். வாதம் பிரதிவாதம் முடிந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்க இருக்கிறது.