கரூர் ராயனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிகள் 3 பேர் நேற்று(4.1.2024) காலை பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால் பள்ளி முடிந்து மூன்று மாணவிகளும் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது பள்ளிக்கு அருகில் மூன்று மாணவிகளின் சீருடைகள் மட்டும் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்களிடம் சீருடை குறித்து விசாரித்த போது, தங்களது பெற்றோர்களுக்கு பிறந்தநாள் எனக்கூறி சீருடையை கழட்டிவிட்டு மாணவிகள் மாற்று உடை உடுத்திச் சென்றதாகக் கூறியுள்ளனர்.
கரூர் தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகாரளிக்க, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், 3 மாணவிகளும் மினி பேருந்தில் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் எங்கு சென்றார்கள்? எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாததால் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவிகள் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.