Skip to main content

கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிக்கான அறிவிப்பு வெளியீடு

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Announcement for construction of air corridor in kilampakkam

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதை அமைப்பதற்கான  நில எடுப்பு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் இந்த ஆகாய நடைப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 900 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீட்டர் நீளத்தில் ஆகாய நடைபாதை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், “சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வரும் ஜெ. பார்த்திபன், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்