புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு +2 படிக்கும் 3 மாணவர்கள், 2 மாணவிகளையும் தனது காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். 5 மாணவ, மாணவிகளை மட்டும் ஒரு ஆசிரியர் தனியாக கொடைக்கானல் சுற்றுலா அழைத்துச் சென்றது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாது என்று கூறியுள்ளனர். பெற்றோர்களிடம் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறியதால் பெற்றோர்களும் சம்மதித்துள்ளனர். ஆனால் 5 மாணவ, மாணவிகளை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
கொடைக்கானல் சென்று திரும்பிய பிறகு அங்கு தங்கி இருந்த இடத்தில் ஆசிரியர் ரமேஷ் தன்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக ஒரு மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அப்போது தான் எந்த விதத்திலும் ஒழுங்கீனமாக நடக்கவில்லை என்று ஆசிரியர் ரமேஷ் கூறியுள்ளார். அதன் பிறகு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளிடம் சுற்றுலா போனதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்த நிலையில் மாணவர் அமைப்புகள் போராட்டங்களுக்கும் தயாராகி வந்தனர்.
இந்தநிலையில் தான் கடந்த 3 நாட்களாக கல்வித்துறை, வருவாய்துறை, காவல் துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் ரமேஷ் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை செய்தனர். விசாரணை முடிவில் ஆசிரியர் ரமேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், சமூக நல அலுவலர் கோகுலபிரியா கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உதவி தலைமை ஆசிரியர் ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.