![Annamalai said that if TN govt opposes the Karnataka government on the Cauvery issue, the BJP will stand by it.](http://image.nakkheeran.in/cdn/farfuture/Tm7EAwiLNvMtTCaBIfa16ebqI0Xx4JtVgmgKQhV2NEg/1688271116/sites/default/files/inline-images/Untitled-1_469.jpg)
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைத் தமிழக அரசு எதிர்த்தால் பாஜக துணை நிற்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டத்தின் வடிவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் பெரும் வரவேற்பு கொடுத்ததோடு, அவருக்கு வெள்ளி செங்கோலையும் பரிசாக அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது. கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் சிவகுமார் காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர்கூட விட மாட்டோம் என்று மிரட்டுகிறார். இந்த நிலையில்தான் சரத் பவார், நிதிஷ் குமார் உள்ளிட்டோர்கள் ஜூலை 11 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைப் பெங்களூரில் கூட்டவுள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் செல்லவுள்ளனர். காவிரி விவகாரத்தைச் சுட்டிக்காட்டி பெங்களூருவில் நடக்கும் பொதுக்கூட்டதைப் புறக்கணியுங்கள். அந்த தன்மானம் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் பாஜக முதல்வர் ஸ்டாலினுக்குத் துணை நிற்கும்.” என்றார்.