தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பாளர்களை 10 நாட்களில் நியமிக்க அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது, தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத் தயாராகுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பாளர்களை 10 நாட்களில் நியமிக்க அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பாளர்கள் எந்த குற்றப்பின்னணியும் இல்லாதவர்களாக நியமிக்க முடிவெடுத்திருக்கிறாராம். ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளின் பட்டியலை தேர்வு செய்யவும் உத்தரவிட்டிருக்கிறாராம். இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்படுகிறது.