Skip to main content

யாரோ செய்த தவறு, மாணவர்கள் படும் பாடு! - அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை!!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018

இந்தியாவின் சிறந்த பொறியியல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பெயர் பெற்று நின்ற அண்ணா பல்கலைக்கழகம், சமீபகாலமாக மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் நம்பிக்கை இழந்து நிற்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 538 உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற ஏழாவது செமஸ்ட்டர் இ.சி.இ பாடத் தேர்வு (electronics and communication engineering) 02.11.18 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் சென்ற 2017ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடந்த தேர்வில் கொடுத்த வினாத்தாளே மீண்டும் கொடுக்கப்பட்டது. இந்த செய்தியை நக்கீரன் வெளியிட்டது. அன்று மாலையே, சர்ச்சைக்குரிய அந்தத் தேர்வு மீண்டும் வருகின்ற 28.11.18 தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. 

 

 Anna University questionnaire

 

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், தேர்வு எழுதி முடித்த மாணவர்கள், 'ஒரு தேர்வு எப்படா முடியும்' என்ற மனநிலையில் இருக்கும் பட்சத்தில் எழுதிய தேர்வையே மீண்டும் எழுதச் சொன்னால் முன்னர் எழுதிய தேர்வில் இருந்த ஆர்வமும் செயல்திறனும் மீண்டும் நடக்கவிருக்கும் மறுதேர்வில் இருக்குமா என்ற பயம் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. அண்ணா பல்கலைகழக மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது? மீண்டும் நடைபெற இருக்கும் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்று மாணவர்களிடம் பேசினோம். 

 

அப்போது மாணவர்கள் பகிர்ந்த கருத்துகள் மறுக்க முடியாதவை. "அண்ணா பல்கலைகழகத்தில் முறையாகத் தேர்வு செய்யப்பட்ட நல்ல பேராசிரியர்கள் இருந்தாலும் அவர்களை ஏதாவது பொய்க் கதைகளை கட்டி முக்கிய பதவிகளில் இருந்து வெளியேற்றுகின்றனர். இதன் விளைவாகத்தான் இந்த வினாத்தாள் பிரச்சனை. மழை, புயல் காரணத்தால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. முக்கியமான கடினமான, தேர்வுகள் வருகிறபோது எழுதி முடித்த இந்தத் தேர்வை மீண்டும் வைப்பதால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளபடுகிறோம். இவர்கள் வைப்பது விருப்பப் பாடம்தான்  என்றாலும் கூட குறைந்த பச்சம் 250 கல்லூரிகளாவது இந்த விருப்பப்பாடத்தை எடுத்திருப்பார்கள். 

 

 Anna University questionnaire

 

இந்த சர்ச்சைக்குரிய தேர்விற்கான மறுதேர்வு நடக்கும் நாளான 28-ஆம் தேதிக்கு முன்பாக 27-ஆம் தேதி தேதி 'கம்யூட்டர் நெட்ஒர்க்' (computer network) என்ற பேப்பர் வருகிறது. அதற்கு நாங்கள் படிப்பதற்கு விடுமுறை நாட்களே இல்லை. இவர்கள் செய்யும் தவறை யார் தட்டிக் கேட்பது? எங்க பெயரையெல்லாம் போட்றாதீங்க. நாங்க உங்ககிட்ட பேசினோம்னு தெரிஞ்சா இந்த கல்லூரியில் இருந்து பட்டப்படிப்பை முடிக்க முடியாது. இந்த நிலையில்தான் உள்ளது தமிழ்நாட்டு பொறியியல் கல்வி" என்று மிகுந்த கோபத்துடன் கூறினார்கள்.



இந்தத் தேர்வை மீண்டும் நடத்த, தேர்வு வினாத்தாள், விடைத்தாள், தேர்வுப் பார்வையாளர், நிர்வாகம் என அனைத்திற்கும் மீண்டும் செலவு செய்யவேண்டியுள்ளது. இந்த வினாத்தாளை தயாரித்த பேராசிரியரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருக்கும் வெங்கடேசனிடம் கேட்டபோது, "இதுதொடர்பாக விளக்கம் கேட்டு வினாத்தாள் தயாரித்தவருக்கு கடிதம் போட்டுள்ளோம். அதற்கான பதிலை இன்னும் அவர் கொடுக்கவில்லை. அவரும் என்னிடம் மெயிலில் பழைய தேர்வுத்தாள்களை அனுப்பச் சொன்னார். நாங்களும் அனுப்பியுள்ளோம். இதுதொடர்பாக அவர் பதில் கொடுத்த பிறகே நடவடிக்கை  எடுக்கப்படும்" என்றார்.

 

வினாத்தாள் தாயாரித்தவர் குறித்த விவரங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்கவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. வினாத்தாள் பிரச்சனையில் பல வினாக்களுக்கு பதில் அளிக்காமல் நிற்கிறது அண்ணா பல்கலைக்கழகம். 

 

சார்ந்த செய்திகள்