Skip to main content

‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

tt

 

“இந்த சாதிக் கருமாந்திரத்துல எங்களுக்கு எப்பவும் ஆர்வம் இருந்தது இல்ல. நாங்க உண்டு. எங்க சோலி உண்டுன்னு கிடப்போம்.   ஆனா, வேற சாதிக்காரங்க அவங்க தலைவரோட நினைவுநாளுக்கு கூட்டம் கூட்டமா கிளம்பிப் போறதப் பார்த்துட்டு, நம்ம ஒற்றுமையவும் காட்டுவோம்னு எங்க பசங்களும் போறாங்க. போலீஸ் பெர்மிஷன் வாங்கப் போன இடத்துல, சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு, ஏதோ சிறுத்தை சினிமா வசனமாமே, இது என்ன மாமியார் வீடா? எச்சக்கல, கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி வீடுன்னு அந்த வசனத்தை ஓடவிட்டு, இவனுங்க ஆக்ட் கொடுத்து, டிக்டாக் ஆப் மூலம் பரப்பிட்டாங்க. சத்தியமா சொல்லுறோம்ங்க. எங்க பசங்க பண்ணுனது தப்புத்தான். போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அந்த மாதிரி பண்ணிருக்கக்கூடாது. வயசுப் பசங்க, எதோ குறும்புத்தனமா பண்ணித் தொலச்சிட்டாங்க. மன்னிச்சிக்கூட விட வேணாம். கேஸ் போட்டு உள்ள வச்சதுகூட தப்பு இல்ல. அதுக்காக, இந்த அடியா அடிக்கணும்.” என்று சிவகாசி – ஏ.துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் குமுறினார்கள். 

 

 

அவர்களில் ஒருவர் “சரிய்யா, போலீஸ்காரங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்களா? லஞ்சம் வாங்குற போலீஸை எத்தனை சினிமாவுல கிண்டல் கேலி பண்ணுறாங்க. அவங்கள இந்தப் போலீஸால என்ன பண்ண முடிஞ்சது? பேப்பர்ல நியூஸ் வராமலா இருக்கு? எந்தப் போலீஸ் அதிகாரி எவ்வளவு லஞ்சம் வாங்கினாரு? எந்த ஏட்டு விபச்சாரத் தொழில் நடத்துறாரு? போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ஆம்பள போலீஸும் பொம்பள போலீஸும் முத்தம் கொடுத்ததெல்லாம் நிஜத்துல நடந்ததுதான? விசாரணைன்னு சொல்லி அப்பாவிப் பொம்பளங்கள கெடுத்த போலீஸ்காரங்களும் இருக்கத்தானே செய்றாங்க? வாய்மையே வெல்லும்னு போர்டு போட்டுக்கிட்டு.. போலீஸ் தப்பு பண்ணுதுல்ல, நல்ல போலீஸ்ன்னா அவங்க கண்ணுக்கு லஞ்சம் வாங்குற போலீஸ்காரங்க தெரிஞ்சாங்கன்னா ஏன்டா காக்கிச்சட்டை போட்டுக்கிட்டு இந்தமாதிரி தப்பு பண்ணுறன்னு வெளுத்திருக்கணும்ல. எந்த போலீஸ்காரங்க அவங்க டிபார்ட்மென்ட்ல நடக்கிற தப்பைத் தட்டிக் கேட்டாங்க? எங்க பசங்களுக்கு இந்த விவகாரமெல்லாம் தெரியாமலா இருந்திருக்கும்?  பப்ளிக்தான? அவங்க ஸ்டைல்ல நடிச்சுக் காட்டி தட்டிக் கேட்டிருக்காங்க. அதுக்காக, எங்க பசங்க பண்ணுனத நாங்க நியாயப்படுத்த விரும்பல. அவங்க பண்ணுனது தப்புன்னா, போலீஸ்காரங்க பழிதீர்த்துக்கிற மாதிரி வெறிகொண்டு அடிச்சது சரியா? தாழ்த்தப்பட்ட மக்கள்ன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா?” என்று ஆவேசமாகப் பேசினார். 

 

கைதாகி சிறையில் அடைபட்டிருக்கும் நான்கு இளைஞர்களில் ஒருவரான முருகேசனின் தந்தை சீனிவாசன் “அடிச்ச அடில எங்க பசங்கள்ல ஒருத்தன் ரத்த வாந்தி எடுத்திருக்கான். கம்பு ஒடிய ஒடிய அடிச்சிருக்காங்க. வெளியூர்ல இருக்கிற வேற ஜாதி போலீஸைக் கூட்டிட்டு வந்து அடிச்சிருக்காங்க” என்றார் பீதியுடன். 

 

கருப்பாயி என்பவர் “எங்க பசங்க அவங்க வாயால அப்படி பேசல. சினிமாவுல யாரோ பேசுன வசனத்துக்கு நடிச்சிருக்காங்க. அதுக்காக போலீஸ்காரங்க காட்டுத்தனமா அடிச்சிருக்காங்க. ஊரே கொதிச்சுப் போயிருக்கு. எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்.” என்றார் பரிதாபமாக.

 

ss

 

சிவகாசி கிழக்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சுரேந்திரகுமாரிடம் பேசினோம். “அடிச்சாங்களா? தெரியலியே!” என்றவர், “அப்படி ஒண்ணும் அடிக்கல. வழக்கும்கூட மிகச்சரியாகத்தான் பதிவு செய்தோம். அந்தமாதிரி யாரும் அடிக்கல.  மெடிகல் சர்டிபிகேட் வாங்கி, மேஜிஸ்ட்ரேட்கிட்ட கூட்டிட்டுப் போயித்தான் ரிமான்ட் பண்ணுனோம்.” என்று ஒரே போடாகப் போட்டார். 

 

சிவகாசி காவல்துறையின் ஆவேச கவனிப்பால், மதுரை அரசு மருத்துவமனையில் காலில் விலங்குடன் சிகிச்சை பெற்றுவரும் ஈஸ்வரனைச் சந்தித்தோம். எழுந்து உட்கார்வதற்கே சிரமப்பட்டார். சிறுநீர் நான்-ஸ்டாப்பாக வெளியேறிக் கொண்டிருந்த நிலையில், ஜீவனற்ற குரலில் நம்மிடம் பேசினார்.  

 

“நெறய போலீஸ்காரங்க சுற்றி நின்னு எங்க நாலு பேரையும் அடிச்சாங்க.  பெஞ்ச்ல படுக்கவச்சு அடிச்சாங்க. லத்தி, கிரிக்கெட் பேட்ட வச்சு அடிச்சாங்க. கால் முட்டியிலயே அடிச்சாங்க.   உங்களக் கொன்னாலும் யாரும் கேட்க மாட்டாங்கன்னு சொல்லிச் சொல்லி அடிச்சாங்க.” என்றார் வேதனையுடன். 

 

tt

 

அந்த இளைஞர்கள் அறிவுறுத்தப்பட வேண்டியவர்கள்தான்! வழக்கு பாய்ந்தது கூட சரிதான்! ஆனால், சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறையே, கொலை வெறித்தாக்குதல் நடத்தியது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கெட்டவர்களை மட்டும் காயப்படுத்துவேன்' - கொலை செய்துவிட்டு பதிவு போட்ட டிக்டாக் பிரபலம்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

பெங்களூரில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ ஆகிய இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கு காரணமாக இருந்த இன்ஸ்டா, டிக்டாக்  பிரபலம் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

 

பெங்களூரின் வடகிழக்கு தியான பம்பை எக்ஸ்டென்ஷனில் 'ஏரோனிக்ஸ் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணீந்திர சுப்ரமண்யா என்பவரும் சிஇஓவாக வினு குமார் என்பவரும் இருந்தனர். இவர்கள் இருவரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இதில் அலுவலக வளாகத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த பெலிக்ஸ் என்ற முன்னாள் ஊழியர் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. டிக்டாக் பிரபலமான பெலிக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்திற்கு ஏற்படும் போட்டியை தடுக்கவே இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட பெலிக்ஸ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கொலை நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெலிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இந்த கிரக மக்கள் எப்போதும் ஏமாற்றுக்காரர்கள். அதனால் இந்த கிரக மக்களை காயப்படுத்துவேன். கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துவேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தமாட்டேன்' எனப் பதிவிட்டுள்ளார். இதை வைத்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

மீசை வினித் மீண்டும் கைது

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Mustache vinith again arrested

 

கேரளாவில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் மீசை வினித். இவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்த நிலையில், தற்போது வழிப்பறி சம்பவத்தில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த மாதம் 23 ஆம் தேதி பெட்ரோல் பங்கின் மேலாளர் ஒருவர் வங்கியில் பணம் செலுத்துவதற்காக 2.5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து பிடித்து மிரட்டி 2.5 லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர்.

 

இதுகுறித்து அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருவனந்தபுரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மீசை வினித் மற்றும் அவனது கூட்டாளி ஜீத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைக் கொண்டு பெட்ரோல் பங்க் மேலாளரை துரத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.