சென்னை ராயப்பேட்டையில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீது கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது நிலுவையில் இருக்கும் பல்வேறு வழக்குகளிலும் கைது செய்வதற்காக சிறையில் இருக்கும் அவரை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வருகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டத்தின் (ஊபா) கீழ் திருமுருகன்காந்தி மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் கைது செய்வதற்காக அவரை சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டார்.
அப்போது திருமுருகன்காந்தி, கடந்த ஜூலை மாதம் சிறையில் இருந்த போது நுங்கம்பாக்கம் பகுதியில் ஒரு கூட்டம் நடத்தியதாகவும், அந்தக்கூட்டத்தில் பாலஸ்தீன விடுதலை பற்றி பேசியதாகவும் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறையில் இருக்கும்போது நான் எப்படி கூட்டம் போட்டு பேசி இருக்க முடியும். கடந்த ஜூலை மாதம் ஊபா சட்டத்தின் கீழ் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்திருந்தபோதும் இவ்வளவு நாட்கள் அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?. ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பின்னர் பல இடங்களில் கூட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனரே?, அது எப்படி? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன்காந்தியை கைது செய்ய நீதிபதி மறுத்து விட்டார். மேலும், ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன்காந்தி மீது பதிவு செய்த எப்.ஐ.ஆரில் உள்ள சந்தேகங்களுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை தள்ளிவைத்தார்.