பரம்பரை வைத்தியர் என்ற போர்வையில் தவறான சிகிச்சையால் பள்ளி மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்கள் அந்த பகுதியில் நூல் கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். அவருடைய மகளுக்கு சிறிது காலமாக உடலில் தோலில் சில பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு முறைகளில் அவர்கள் சிகிச்சை மேற்கொண்டு அந்த நோயை குணப்படுத்த முயன்றுள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமிக்கு அந்த தோல் நோய்க்காக நீண்ட நாட்களாக மருத்துவம் பார்த்தும் நோய் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே தெரிந்தவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் விசாரித்து வந்தனர். அப்பொழுது பொள்ளாச்சியை சேர்ந்த பரம்பரை வைத்தியர் மருகு மகேந்திரன் என்பவரை தொடர்பு கொண்டு தங்கள் மகளின் நிலையை விளக்கி உள்ளனர். அடுத்தநாள் தனபால் வீட்டிற்கு சென்ற வைத்தியர் மருகு மகேந்திரன் தான் பரம்பரை வைத்தியர், என் குடும்பம் பரம்பரை பரம்பரையாக சித்த வைத்தியம் பார்த்து வருகிறது. சிறுமியின் தோல் நோய் பாதிப்பை குணப்படுத்த கொல்லிமலையில் இருந்து வைரத்தை விட அரிதான மூலிகை மருந்து ஒன்றை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த மருந்தை மாணவியின் தோலில் தடவியுள்ளார். அதன்பிறகு சிகிச்சை அளித்ததற்காக 5,000 ரூபாயை வாங்கிக்கொண்டு மருது மகேந்திரன் சென்றதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களிலேயே சிறுமியின் தோல் தீக்காயம் பட்டதுபோல் வெந்து போனது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் இதற்கு மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆங்கில மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பித்துள்ளனர். அப்போது மாணவி மீது தடவடபட்டது மூலிகை மருந்து அல்ல டைல்ஸ் கற்களுக்கு பூசப்படும் ரெட் ஆசிட் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதனால் சிறுமியின் தோல் மிகவும் தீக்காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதனை சரி செய்ய இயலாது கட்டுப்படுத்தமட்டுமே முடியும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பரம்பரை வைத்தியர் என்ற பெயரில் மோசடி செய்த மருகு மகேந்திரன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்திய மருத்துவ சட்டத்தின்கீழ் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருகு மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மகேந்திரனை போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த மருந்தில் கலந்திருப்பது ரெட் ஆசிட், துஜா, திருநீர், காஸ்டிக் சோடா என்பது தெரியவந்தது. மேலும் இந்த புகாரில் இருந்து தப்பிப்பதற்காக தலைமை காவலர் ஒருவருக்கு நான்காயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் தனது புகழை கெடுக்க சதி நடப்பதாகவும் மருகு மகேந்திரன் கூறியுள்ளார். தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.