Skip to main content

டெல்லியை நீக்கிவிட்டு அரசியல் செய்ய முடியாது - கமல்ஹாசன் பேட்டி

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
Kamal Haasan



மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. 
 

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 
 

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். நான் தனியாக முடிவு எடுக்க முடியாது. கட்சியில் எங்களுக்கு அனுசரணையான சூழல் எல்லாவற்றையும் பார்த்து முடிவு எடுக்கப்படும். இது எங்களுக்காக மட்டும் எடுக்கக்கூடிய முடிவு அல்ல. தமிழகத்துக்காகவும் சேர்த்து எடுக்கக்கூடிய முடிவு. தமிழக அரசியலில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம். ஏனென்றால் டெல்லியை நீக்கிவிட்டு தனியாக அரசியல் செய்ய முடியாது. நான் இந்தியன், முதலில் தமிழன்.
 

மக்கள் அவர்களின் பிரச்சனையை எங்களிடம் முன்வைக்கிறார்கள். நாங்கள் பிரச்சனையை அவர்களிடத்தில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை, ஏழைகளின் திண்டாட்டம் என்று மக்களுக்கு அனைத்து பிரச்சினைகளும் தெரியும். அதை போக்க என்ன வழி என்பதை நாங்கள் வல்லுனர்கள், சாதாரண மக்களிடம் கேட்டு தெரிந்து வந்து கொண்டு இருக்கிறோம். 
 


கொள்கைக்கும், திட்டத்துக்கும் இடையே பெரிய குழப்பம் நமக்குள் இருக்கிறது. கொள்கை மாறாது. அந்த கொள்கைகளை நிறைவேற்ற திட்டங்கள் தீட்டுவோம். அந்த திட்டம் சரியில்லை என்றால் அது மாறும். கொள்கைக்காகதான் திட்டங்கள். நீர்நிலை ஆதாரங்களை காக்க, பெண்களின் நலன், ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது. அதுபோன்று கல்வி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும் கடமை உள்ளது. இவைகளை போக்க வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
 

மக்களுக்கு இலவசமாக கொடுப்பது என்பது, தனது பாக்கெட்டில் இருந்து கொடுப்பது இல்லை. இலவசம் என்பது நாம் சம்பாதித்து கொடுப்பதுதான். அடிப்படை கல்வி, மருத்துவத்தை இலவசமாக கொடுக்க வேண்டும். அதை செய்யாமல் குறுக்கு வழியில் எதையும் செய்ய முடியாது. தற்போது அரசு கொடுக்கும் இலவச கல்வி சரியாக இல்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்