திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டது.
அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதார் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.