வேறு எந்த மாவட்டத்திலும் அங்கன்வாடி மையங்களில் கேமரா பொருத்தவில்லை. ஆனால், விருதுநகர் மாவட்ட நிர்வாகமோ அங்கன்வாடி மையங்களில் கேமரா பொருத்துவதில் உறுதியாக இருக்கிறது. இதற்கான காரணமும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் எண்ண ஓட்டமும், அப்போது வாட்ஸ்-ஆப் மூலமாக பரப்பப்பட்டது.
அந்தத் தகவலில் ‘விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அங்கன்வாடி மையங்களுக்கு ஆய்வுநடத்த பலமுறை சென்றுள்ளார். அப்போதெல்லாம் குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்துள்ளனர். ஆனால், 50 குழந்தைகள் வரை இருப்பதாகப் பெயர்களை எழுதி, போலியான அந்த எண்ணிக்கைக்குரிய பொருட்களை தினம்தோறும் பெற்று வருகின்றனர். இது ஆண்டாண்டு காலமாக ஏழைக் குழந்தைகளின் வயிற்றில் அடித்து நடந்துவரும் மிகப்பெரிய ஊழலாகும்.
குழந்தைகள் வருகையைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு முறையான உணவு வழங்குவதைக் கண்காணிப்பதற்கும், அங்கன்வாடி மையங்களில் சிசிடிவி நிறுவ வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்மையான செயலை எதிர்க்கும் அங்கன்வாடி ஊழியர்கள் எப்படி அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் சேவகர்களாக இருக்கமுடியும்? இத்தகைய எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால்தான் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். அடாவடியாகச் செயல்படும் அங்கன்வாடி ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, இந்த வேலைக்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்கள், கணவனை இழந்த கைம்பெண்களை நியமித்தால் சிறப்பாக செயல்படுவார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அங்கன்வாடி ஊழியர்கள் தரப்பிலோ, ‘பெண்களும், கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் வந்துசெல்லும் அங்கன்வாடி மையங்களில் கேமரா பொருத்தும் நோக்கம் என்ன? பெண்களை இழிவுபடுத்துகிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்’ என்னும் குமுறல் வெளிப்பட்டது. அதனால், தொடர்ந்து போராடிவருகின்றனர்.
இதே பிரச்சனைக்காக இதற்குமுன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பலமுறை போராட்டங்கள் நடத்தினர். தற்போது போராட்டம் தொடரும் நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கழிவறைகளை, ஆட்சியர் ஜெயசீலனுடைய உத்தரவின் பேரில் மூடியிருக்கின்றனர். அதனால்தான், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் உள்ள கதவின் மீதேறி முற்றுகை போராட்டத்தை தொடர்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அங்கன்வாடி ஊழியர் ஒருவர், “நேத்து நைட்ல இருந்து போராடுறோம். போராட்டம் முடியல. யாரும் வீட்டுக்குப் போகல, ரெண்டாவது நாளா போராட்டம் தொடருது. இன்னைக்கு காலைல கலெக்டர் சொல்லி, டாய்லெட்டை பூட்டிட்டாங்க. அது பிரச்சனை ஆயிருச்சு. போராடும் பெண் ஊழியர்கள் இயற்கை உபாதையைக் கழிப்பதற்குக்கூட இடைஞ்சல் தருகிறார்கள் என்றால், என்ன சொல்வது? அதனால்தான், கலெக்டரேட்ல இருக்கிற பாத்ரூமுக்குப்போக கேட் மேல ஏறினோம் போலீஸ் தடுத்ததுல தள்ளுமுள்ளு நடந்துச்சு.
அங்கன்வாடி சென்டர்ல சிசிடிவி பொருத்துறதுல கலெக்டர் தீவிரம் காட்டுறதுனால, கவர்மென்ட் எங்களுக்கு கொடுத்த 1400 செல்போன்களை ஏற்கனவே திருப்பி கொடுத்துட்டோம். செல்போனை திரும்ப வாங்கலைன்னா நீங்க வேலை பார்க்கிற இடத்தை காலியிடம்னு அறிவிச்சிருவோம்னு மிரட்டுறாங்க. 8 கிமீ தூரத்துக்கு அப்பால் இருக்கிற இடத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு. ஆனா.. திருச்சுழில வேலை பார்க்கிற அங்கன்வாடி ஊழியரை 70 கி.மீ. தள்ளியிருக்கிற ராஜபாளையத்துக்கு டிரான்ஸ்பர் போட்டிருக்காங்க. நாங்க அமைச்சர்கள் உதயநிதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., தங்கம் தென்னரசுன்னு எல்லார்கிட்டயும் மனு கொடுத்திருக்கோம். அமைச்சர்கள் சொல்லியும் கேட்கிற மனநிலையில் இந்த கலெக்டர் இல்ல. விருதுநகருக்கு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்த வந்திருக்காங்க. அவங்ககிட்டயும் எங்க பிரச்சனையை சொல்லிருக்கோம். கலெக்டர்கிட்ட பேசிருக்காங்க. பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டிருக்காங்க. அடுத்து என்ன நடக்குமோன்னு தெரியல” என்றார் பரிதவிப்புடன்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனைத் தொடர்புகொண்டோம். தொடர்ந்து பிசியாகவே இருந்தார். அவர் விளக்கம் அளிப்பதற்கு முன்வந்தால், வெளியிடத் தயாராக இருக்கிறோம்.