திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் பட்டாளம்மன் கோவில் தெருவில் கிழக்குப் பகுதியில் இரு அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இதில் தென்புறம் உள்ள அங்கன்வாடி மையம் (குழந்தைகள் நல மையம்) 2008-2009 நிதியில் கட்டப்பட்டது.
இந்த அங்கன்வாடி மையம் தற்போது விரிசல் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பேஸ்மட்டத்தில் உள்ள கற்கள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுதவிர கட்டிடத்தின் உள்ளே சமையலறையில் சுவர்கள் விரிசலடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. குழந்தைகள் உட்கார்ந்து படிக்கும் இடத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்திருப்பதால் நடந்து செல்லும் போது குழந்தைகள் தடுமாறி விழுந்து காயம் அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையத்திற்கு பின்புறம் முற்செடிகள் புதர் போல் மண்டிக்கிடப்பதால் கட்டிடத்தின் விரிசல் வழியே அடிக்கடி பாம்பு, தேள், பூரான் வருவதாக குழந்தைகளின் பெற்றோர்கள் புகார் செய்கின்றனர். இதனால் தங்கள் குழந்தைகளை அவர்கள் சரிவர அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதில்லை. மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும் அல்லது புதிதாக அங்கன்வாடி மையம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று ஆதிதிராவிட காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.