80 ஆண்டுகள் பழமையான தேர் சீரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மாவட்டத்தில் பெரிய கிராமங்களில் ஒன்று என்ற சிறப்பு பெற்ற கிராமம். இந்த கிராமத்தில் கிராம காவல் தெய்வமாக உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் வாழவந்த பிள்ளையார், பேச்சியம்மன், முத்துமாரியம்மனுக்கு என்று தனித்தனி தேர்கள் ஒரே நேரத்தில் சிறுவர்கள், பெண்கள், பக்தர்கள் என தனித் தனியாக இழுத்துச் செல்லும் சிறப்பும் உண்டு. முத்துமாரியம்மன் வீற்றிருக்கும் பெரிய தேர் கடந்த 80 வருடங்களுக்கு முன்பு வைரம் பாய்ந்த மரங்களால் செய்யப்பட்டு பக்தர்களால் இழுக்கப்பட்டு வந்தது.
கடந்த சில வருடங்களாக கரோனா கட்டுப்பாடுகளால் திருவிழா நிறுத்தப்பட்டதால் தேரோட்டமும் நடக்கவில்லை. இந்த நிலையில் தான் பழமையான வைரத்தேரின் மர அச்சுகள் சிறிது சேதமடைந்திருந்ததால் மர அச்சுகளையும், சில பெரிய சக்கரங்களையும் புதிய மரங்களில் செய்து பொருத்தியுள்ளனர். பழமையான தேர் மராமத்து செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை வைரத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டார். தேருக்கு முன்பு பெண்கள் கும்மியடித்துச் சென்றனர். வான வேடிக்கைகளுடன் வெள்ளோட்டத் திருவிழா நடந்தது.