விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அன்புச்செழியன். இவரது குடும்பச் சொத்தானது கூட்டுப் பட்டாவாக இருந்துள்ளது. அதை உட்பிரிவு செய்து தனிப்பட்டாவாக மாற்றம் செய்து தருமாறு செஞ்சி தாலுகா அலுவலகத்தில் கடந்த 2017 ஏப்ரல் 29ஆம் தேதி முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.
ஒரு இடத்தையோ, நிலத்தையோ உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய தாலுகா அளவில் உள்ள சர்வேயர் அதை அளவீடு செய்து முடிக்க வேண்டும். செஞ்சி தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை செய்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்த சங்கர். இவர் அன்புச்செழியன் கோரியபடி உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து கொடுக்க 12000 ரூபாய் லஞ்சமாக பணம் தருமாறு அன்புச்செழியனிடம் கூறியுள்ளார். அவ்வளவு பணம் தர முடியாது என்று அன்புச்செழியன் பேச அவரிடம் பேரம் பேசிய சர்வேயர் சங்கர் 7000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்து தர முடியும் என்று கறாராகப் பேசியுள்ளார். தங்களுடைய சொத்தை அளவீடு செய்து முறைப்படி பட்டா மாற்றம் செய்து தர வேண்டியது அரசு ஊழியரான சர்வேயர் சங்கரின் பணி. அதை செய்து முடிக்க 7000 ரூபாய் லஞ்சமாக பணம் கேட்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாத அன்புச்செழியன் இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
அது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து அவர்கள் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவி கொடுத்த 7000 ரூபாய் பணத்தை சர்வேயர் சங்கரிடம் அன்புச்செழியன் லஞ்சமாக கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக சங்கரைப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பொறுப்பு நீதிபதி புஷ்பராணி நேற்று தீர்ப்பளித்தார். அதில் லஞ்சம் பெற்ற சர்வேயர் சங்கருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அரசு ஊழியரான சர்வேயர் சங்கருக்கு லஞ்ச வழக்கில் சிறைத் தண்டனை கிடைத்துள்ள தகவல் மாவட்ட அளவில் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.