Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி!:  மேட்டூர் உறுப்புக்கல்லூரியில் செம்மலை எம்எல்ஏ அதிரடி ஆக்ஷன்!!

Published on 20/05/2018 | Edited on 20/05/2018


 

 


நக்கீரன் இணையதள செய்தி எதிரொலியாக, மேட்டூர் உறுப்புக்கல்லூரியில் அதிமுக எம்எல்ஏ செம்மலை, நேற்று நேரில் சென்று அதிரடியாக ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். 
 

சேலம் பெரியார் பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் மேட்டூரில் கடந்த 2006ம் ஆண்டு, உறுப்புக்கல்லூரி தொடங்கப்பட்டது. ஒரு பல்கலை நிர்வாகத்தின் கீழ், தமிழக அளவில் தொடங்கப்பட்ட முதல் உறுப்புக்கல்லூரி இதுவாகும். இக்கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக மேட்டூரைச் சேர்ந்த ஒரு தரப்பினர், கல்லூரியில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு பெற்றனர். 
 

இதனால் கல்லூரியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர்கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, கூடுதல் வகுப்பறைகளும் கட்ட முடியாததால், புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 

தொடர்ந்து இரண்டுமுறை அதிமுக ஆட்சிக்கு வந்தும்கூட, கல்லூரி நிலம் தொடர்பாக பெறப்பட்ட தடை உத்தரவை உடைப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுச்சுவர் இல்லாததால், கல்லூரி மைதானம், வளாகத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது. இரவு நேரங்களில், திறந்தவெளி மதுக்கூடமாகவும் மாறி விட்டது.

 

Semmalai


 

இதுகுறித்து 'நக்கீரன் இணையதளம்', மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. 
 

இப்பிரச்னை குறித்து மேட்டூர் அதிமுக எம்எல்ஏ செம்மலையின் கவனத்திற்கும் அலைபேசி வாயிலாக கொண்டு சென்றோம். இதையடுத்து அவர் நேற்று (19/5/2018) நேரடியாக கல்லூரிக்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். ஆய்வின்போது கல்லூரி முதல்வர் மருதமுத்துவும் உடன் இருந்தார்.
 

இதுகுறித்து செம்மலை எம்எல்ஏ கூறுகையில், ''கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்திய வழக்கில் கலலூரியின் மேற்கு மற்றும் வடக்குபுறத்தில் உள்ள நிலத்தில் ஏதும் சட்டச்சிக்கல் இல்லை. தெற்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள நிலத்தின் மீதான உரிமை தொடர்பான வழக்கில் மட்டுமே தடையாணை பெறப்பட்டுள்ளது.
 

இக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கேட்டார். அதற்காக, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்க எம்எல்ஏ நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் ஒதுக்க இந்த இடத்திலேயே ஆவன செய்துள்ளேன். 
 

 

 

முதல்கட்டமாக கல்லூரியின் மேற்கு மற்றும் வட பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் எழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கின் தற்போதைய நிலை, வழக்கு எண் ஆகிய விவரங்களை கேட்டு வாங்கிக் கொண்டேன். நான் சென்னை சென்றதும், இந்த வழக்கை துரிதப்படுத்துவதுதான் முதல் பணி. இதுகுறித்து பெரியார் பல்கலை நிர்வாகத்திடமும் பேசுகிறேன்,'' என்றார்.

 
 

சார்ந்த செய்திகள்