நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இதுவரை பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மாணவர்களின் உயிரைப் பறிக்கும் இந்த நீட் தேர்வைத் தடுக்க தமிழ்நாடு அரசின் சார்பில் தற்போது பல முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் திமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த அக்டோபர் 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் 'நீட் விலக்கு - நம் இலக்கு' என்ற தலைப்பில் 50 நாட்களில், 50 லட்சம் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், அந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மற்றும் பல திமுக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ம.க கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆரூர் பகுதிக்கு வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் கோவில் முன்பாக உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. தமிழக ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்திய போது சாதி, மதம் மற்றும் அரசியல் கட்சிகளை அப்பாற்பட்டு ஒன்றிணைந்து அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கையெழுத்திட்டனர். அது போல், நீட் தேர்வு என்பது தமிழகத்தில் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். திமுகவின் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து திட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். எனவே, நீட் தேர்வில் அரசியல் செய்யக்கூடாது” என்று கூறினார்.