தமிழகத்திலேயே முதல் முறையாக உணவு, உடை, புத்தகம் உள்ளிட்டவைகளை இருப்பவர்கள் கொடுத்து இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையம் படூர் ஊராட்சியில் துவங்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே.ஏ.எஸ்.சுதாகர் முயற்சியில் தமிழகத்தில் முதல் முறையாக அன்புகுடில் உதவும் கரங்கள் மையத்தை அமைத்துள்ளார். இந்த அன்புகுடில் உதவும் கரங்கள் மையத்தில் உணவு, உடை, புத்தகம், பழ வகைகள், பெண்களுக்கு நாப்கின் உள்ளிட்டவைகளை அவரவர் தேவைக்கேற்றார் போல் எடுத்துச் செல்லும் வகையில் இந்த அன்புக்குடிலை அமைத்துள்ளனர்.
சென்னையை அடுத்து வளர்ந்து வரும் பகுதியாக உள்ள படூர் ஊராட்சியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் துறை நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் இங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும் தங்களுக்குத் தேவை போக மீதமுள்ள உணவு, உடை, புத்தகம், பழம் உள்ளிட்ட பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் வகையில் படூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையத்தை நேற்று ஊராட்சி மன்றத் தலைவர் தாரா மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே.ஏ.எஸ்.சுதாகர் இருவரும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு தேவையான புத்தக குடில் அமைக்கப்பட்டுள்ளது, அதேபோல் பசி என்று யாரிடமும் கையேந்தும் நிலை இங்கு உருவாக கூடாது என்பதற்காக உணவு குடில், தேவைக்கேற்றார் போல் ஆடை குடில், பெண்களுக்கான நாப்கின் குடில் என ஒரே இடத்தில் மக்கள் பயன்பெறும் வகையும் நான்கு குடில் அமைத்துள்ள மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் சுதாகரின் செயல் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏழைகளின் நிலை புரிந்து அன்புக்குடில் உதவும் கரங்கள் சேவை மையம் அமைத்து கொடுத்த சுதாகருக்கு பலதரப்பு மக்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதில் பேசிய மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே.ஏ.எஸ்.சுதாகர் கூறுகையில் "பொதுமக்கள் தங்களுக்கு தேவை இல்லாத புத்தகங்கள், உணவு பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை யாருக்கு கொடுப்பது எங்கு சென்று கொடுப்பது எனத் தெரியாமல் வீணடித்து வருகின்றனர். இதனைப் போக்கும் வகையில் தங்களுக்குத் தேவைப்படாத பொருட்களை இந்த மையத்தில் சென்று வைத்து விட்டால் தேவைப்படுவோர் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் ஒரு ரூபாய் காயின் செலுத்தி பெண்கள் நாப்கின் பெற்றுக் கொள்ளும் வகையில் நாப்கின் இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது.
உணவு, உடை, புத்தகம், பழ வகைகள் உள்ளிட்டவைகளை இருப்பவர்கள் இல்லாதவர்களைத் தேடி சென்று கொடுப்பதை தவிர்த்து இல்லாதவர்கள் அவர்களுக்கு தேவைக்கேற்றார் போல் யாரிடமும் கேட்காமல் அவர்களுக்கு தேவையானதை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வகையில் படூர் ஊராட்சியில் அன்புக்குடில் எனும் உதவும் சேவை மையத்தை மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில் புதிதாக துவங்கியுள்ளது பாராட்டத்தக்கது.