Skip to main content

அமமுக-வை பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி புகழேந்தி மனு!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன், அக்கட்சியைப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இருந்து விலகிவிட்டதால், அந்தப் பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் கட்சியைப் பதிவு செய்யக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என புகழேந்தி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ammk registration pugalenthi chennai high court


தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியைப் பதிவு செய்ய அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில், தான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், பின்னர், தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி, தானும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் அ.ம.மு.கவில் இருந்து விலகிவிட்டதால், கட்சியைப்பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். 


மேலும், கட்சிக்கு உள்கட்சி விதிகளை உருவாக்காமலும், பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்காமலும், டி.டி.வி.தினகரன், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிவிட்டதாகவும், தன்னை பொதுச்செயலாளர் எனப் பிரகடனம் செய்து கொண்டதுடன், தன் விருப்பப்படி, நிர்வாகிகளை நியமித்துள்ளதாகவும், மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார்.

ammk registration pugalenthi chennai high court


உள்ளாட்சித் தேர்தலுக்காகக் கட்சியைப்பதிவு செய்ய தினகரன் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதால், அ.ம.மு.க வை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்