நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமமுகவின் செயலாளர் காரில் இருந்து 16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த சேலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்முகம் என்பவரின் சோதனை செய்த போது உரிய ஆவணமின்றி 16.85 லட்சம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக இந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தை வாழப்பாடி கோட்டாட்சியர் அலுவலர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.