
புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலமாக இன்று சென்னைக்கு வர இருக்கிறார். இன்று மாலை சென்னை வரும் அமித்ஷா, ஆவடி சி.ஆர்.பி.எஃப் மைதானத்தில் தங்குகிறார். அங்கிருந்து நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லவிருக்கும் அவர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க இருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம், அரவிந்தர் ஆசிரமம் ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட இருக்கிறார். அதனையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் 70 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட இருக்கும் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி கட்டடம், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பணியைத் துவக்கி வைக்கிறார். புதுச்சேரியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உள்ளார். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்த பிறகு புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.