இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில், நேற்று முன்தினம் (17.12.2024) உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர்...அம்பேத்கர்... என்று சொல்வதற்கு பதிலாக கடவுளின் பெயரைச் சொன்னால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று பேசியிருந்தார்.
இதையடுத்து அமித்ஷா பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க. எம்.பி.-க்கள் அமித்ஷாவை கண்டித்து பாரளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து கோஷங்கள் எழுப்பி அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து இன்று(19.12.2024) போராட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் திருவள்ளூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளரும் திருவள்ளூர் மண்டல பொறுப்பாளருமான பழ.செல்வகுமார் பேசினார். அதில் “எங்களுக்கு அன்னையும் அண்ணலும் ஒன்றே, எங்கள் தாய்க்கு நிகரான தலைவரை அவமதித்த தலித் விரோத அமித்ஷாவே உடனடியாக பதிவு விலகு” என்று கோஷமிட்டு தனது எதிர்ப்பை காட்டினார்.