கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்து தமிழக முதல்வர் பேசுகையில், ''கள்ளக்குறிச்சி விவகாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பல்வேறு அலுவல்களில் இது குறித்து பேசி வருகிறோம். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் தண்டனைச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கதுறையின் திருத்தச் சட்ட மசோதா நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்' என தெரிவித்துள்ளார்.