தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்கள் மற்றும் போதை வகைகள் கடத்தப்படுகின்றன. அவற்றில் சில பிடிபட்டாலும் பல வகைகள் தப்பி விடுகின்றன. தவிர தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சட்ட விரோதமான பொருட்களின் விற்பனை நடப்பதாக தூத்துக்குடியின் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு மிகச் சரியான ரகசிய தகவல் கிடைக்க, புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ரோந்து வருகிறபோது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தின் பெத்தாலிஸ் ஆனந்த்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரான ஈஸ்வரன் என்பது தெரிய வர, அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டிருக்கிறார்கள். அதில் 18 கிலோ அம்பர் கிரீஸ் இருப்பது தெரிய வந்திருக்கிறது. கடல் வாழ் உயிரினமான திமிங்கலங்களின் அரிய வகை உமிழ் நீர் கட்டிகளான இவை மதிப்புள்ள உச்ச விலை கொண்டவை. நறுமணப் பொருட்கள், வாசனை திரவியங்கள் இதன் மூலம் தயாரிக்கப்பட்டு நல்ல விலையில் சந்தைப்படுத்தப்படுவதால் இதன் சர்வதேச மதிப்பு 31.68 கோடி என்கிறார்கள் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்.
சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டு விற்பதற்காக பேரம் பேச முயன்றது தெரியவர, 4 பேரையும் கைது செய்த மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தினர். ஆழ்கடலின் அரிய வகை பொக்கிஷங்கள் கடத்தல் புள்ளிகளின் குறியாக இருக்கிறது.