இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மாதவன், “ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. மேலும் பஞ்சாங்கத்தின் உதவியுடன் தான் இஸ்ரோ செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்ப முடிந்தது" என்று தெரிவித்திருந்தார். இவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் நடிகர் மாதவனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் மாதவனை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இது குறித்து விளமளித்துள்ளார். ''மாதவன் பேசிய கருத்துக்கள் சரிதான். விண்வெளி பயணங்களுக்கு பஞ்சாங்கம் பார்த்து அனுப்புவது உலகளாவிய நடைமுறைதான். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சாங்கம் பார்த்து அனுப்புவதில்லை. அறிவியல்பூர்வமாக நேரம் குறிக்கப்பட்ட பின்னர் அனுப்பப்படுகிறது. கோள்களுடைய இருப்பிடம், கோள்களிலிருந்து பூமியின் இருப்பிடம் ஆகியவற்றை தொழில்நுட்ப ரீதியாக அணுகிய பின்னரே நேரம் குறிக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.