Skip to main content

“சாந்தனை இலங்கை அனுப்ப ஒரு வாரத்தில் அனுமதி...” - மத்திய அரசு

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Allow Shantan to be sent to Sri Lanka within a week Central Govt

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 2022 நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். மேலும் தங்களை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சாந்தன் தன்னை இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு இந்தியா, இலங்கை மற்றும் தமிழக அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், “கடந்த 32 ஆண்டுகளாக தனது தாயை பார்க்கவில்லை. அவரது முதுமைக் காலத்தில் கூட இருந்து வாழ விரும்புகிறேன். தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சாந்தன் தாயகம் திரும்ப ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும்” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பில், “சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை  தூதரகம் வழங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு  நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

சார்ந்த செய்திகள்