நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அதிமுக தலைமை பல்வேறு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதே நேரம் பாஜக உடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? அல்லது அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தைலாபுரத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாமக நிர்வாகிகள் அதிமுக கூட்டணியை விரும்பி வந்த நிலையில் பாஜக பக்கம் பாமக செல்லும் சூழல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.