சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். தேமுதிகவின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். அதையெல்லாம் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போதே அறிவித்துவிட்டார்'' என்றார்.