திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா சின்னாளபட்டியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது சமுதாய வளைகாப்பில் கலந்துகொண்ட கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் தாய்வீட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் போது வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்தையும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டதோடு அதற்கான நிதியும் கொடுத்து இந்நிகழ்ச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. மேலும், 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு எவர்சில்வர் தாம்பூலத்தட்டு, சேலை, பிளாஸ்டிக் கூடை, பழங்கள், திருமாங்கல்ய கயிறு, வளையல், சந்தனம், குங்குமம் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன.
அதன் பிறகு பேசிய ஐ.பெரியசாமி, “கரோனா தொற்று காலத்தில் தைரியமாக 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் இந்த மண்டபத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். வாழையடி வாழை என்பார்கள் அதுபோல பெண் இனத்திற்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்ட ஒப்பற்றத்தலைவர் கலைஞர் வழியில் அவரது வாரிசான மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் போட்ட முதல் கையெழுத்தில் தொடங்கி இன்றுவரை நிறைவேற்றிவரும் அனைத்து திட்டங்களும் பெண்களுக்கான நலத் திட்டங்களே.
தமிழக அரசு பொருளாதார நெருக்கடியிலும் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை அறிவித்தது. பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர் செயல்படுத்திய திட்டமே இது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான பெண் கூலித் தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் பல கிராமங்களுக்குச் சென்று வேலை பார்த்து வருவதோடு வியாபாரமும் செய்துவருகின்றனர். இதன் மூலம் தினசரி அவர்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மிச்சமாகின்றது. அதன் மூலம் அவர்களின் சிறுசேமிப்பும் உயர்கிறது. சின்னாளபட்டியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்துவதோடு பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று கூறினார். இந்தவிழாவில் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபாணி, ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி உட்படக் கட்சி பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.