சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (12/07/2021) காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை கொண்டது. கர்நாடகாவை விட தமிழ்நாட்டில்தான் அதிகமான நீளத்துக்கு காவிரி பாய்கிறது. வழக்கமான காலத்திலேயே நமக்கு தர வேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்குவது இல்லை. வெள்ளக் காலங்களில் நீரை தேக்கி வைக்காத சூழலில் உபரிநீரைத்தான் கர்நாடகம் தருகிறது.
மேகதாது அணையைக் கட்டிவிட்டால் எப்படி தண்ணீர் வரும் என்பதே நமது கேள்வி. கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைத்து வரும் நீர் இந்த புதிய அணையில் தேக்கி வைக்கப்படும். தமிழ்நாட்டுக்கு காவிரி வாழ்வுரிமை என்பதால் மேகதாது அணை கட்டினால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். வாழ்வாதாரப் பிரச்சனையில் தமிழ்நாடு ஒரே சிந்தனையில் நின்றது என்பதை நாம் காண்பிக்க வேண்டும்" என்றார்.